உலக பொருளாதார வலிமையில் இந்தியாவுக்கு நான்காவது இடம்!: ஜப்பானை பின்தள்ளி முன்னேறி அபார சாதனை

புதுடில்லி:உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2014ல், 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம், 4 டிரில்லியன் டாலர், அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

உலகின் பெரும் பொருளாதார நாடுகளை, அதன், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

கடந்த, 2014ல், இந்த பட்டியலில் நம் நாடு, 10வது இடத்தில் இருந்தது. கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட, சர்வதேச நாணய நிதியத்தின், 2025ம் ஆண்டுக்கான உலக பொருளாதார கண்ணோட்டம் அறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா, நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்பட்டிருந்தது.

பிரகாசமான வாய்ப்பு



இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம், நிடி ஆயோக் அமைப்பின், 10வது ஆண்டு கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடர்பாக, டில்லியில் நேற்று பேசிய, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது:

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விபரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம்.

தற்போதுள்ள நம் பொருளாதார வளர்ச்சி நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதைய நிலையில், ஜெர்மனியின் ஜி.டி.பி., 4.744 டிரில்லியன் டாலராக, அதாவது 403.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2024 - 25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்தபோதும், மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

சீர்திருத்த நடவடிக்கை



இப்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

கடந்த, 2014ல் இந்த பட்டியலில், இந்தியா, 10வது இடத்தில் இருந்தது. 2022 செப்டம்பரில் ஐந்தாவது இடத்தை பிடித்தோம். அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, 2013 - 14ல் இந்தியாவின் தனிநபர் வருவாய், 1,22,476 ரூபாயாக இருந்தது. இது 2025ல், 2,45,293 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், 2025 - 26ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பான, 6.5 சதவீதத்தைவிட சற்று குறைவாகும். உலகளாவிய புவிஅரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள், வர்த்தகப் போட்டிகள் இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.



10 பெரும் பொருளாதாரங்கள்

நாடுகள் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (லட்சம் கோடி ரூபாயில்)அமெரிக்கா 2,596.40சீனா 1,637.80ஜெர்மனி 403.71இந்தியா 356.61ஜப்பான் 356.52பிரிட்டன் 327.05பிரான்ஸ் 273.39இத்தாலி 206.11கனடா 189.93பிரேசில் 181.41

Advertisement