பட்டா அனுமதிக்கு கட்டுக்கட்டாக வாங்கும் சகோதரிகள்!

''அமலாக்கத்துறை அதிகாரிகளையே அலைய விடுறாங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.
''எதுக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழக போலீசார் பதிவு செய்யும், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான், அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துறாங்க... குறிப்பா, லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப் பிரிவுகள்ல பதிவு செய்யும் வழக்கு விபரங்களை வாங்கி விசாரிக்கிறாங்க...
''சமீபத்துல, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாகவும், லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தான் விசாரணை நடத்தினாங்க... இப்படி, தமிழக போலீசார் பதிவு செய்ற வழக்குகளின், எப்.ஐ.ஆர்., நகலை தர்றதுக்கு, 'நோடல்' அதிகாரியை நியமிக்கணும்னு தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் அமலாக்கத் துறை கோரிக்கை வச்சும், இதுவரைக்கும் நடவடிக்கை இல்லைங்க...
''இதனால, போலீசாரிடம், எப்.ஐ.ஆர்., நகல் வாங்க அமலாக்கத் துறையினர், தலையால தண்ணி குடிக்க வேண்டியிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லிப்ட் இல்லாம ரொம்பவே சிரமப்படறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை கே.கே.நகர்ல மின் வாரியத்துக்கு பெரிய அலுவலகம் ஒண்ணு இருக்கு... சென்னையில இருக்கற அனைத்து மின் அலுவலகங்களுக்கும் இது தான் தலைமை அலுவலகம் ஓய்...
''இங்க, கணக்கு, வருவாய், நிதி, மீட்டர் பழுது பார்த்தல், இயக்கு தல், பராமரிப்பு, சப் - ஸ்டேஷன்னு பல பிரிவு அலுவலகங்கள் இருக்கு... மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்னு தினமும் நுாற்றுக்கணக்கானவங்க இங்க வந்து போறா ஓய்...
''ஆனா, இந்த அலுவலகத்துல, 'லிப்ட்' வசதி இல்ல... இதனால, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் ரொம்பவே சிரமப்படறா ஓய்...
''குறிப்பா, மாற்றுத்திறனாளிகள் வந்தா, கூட வரவா ரொம்ப சிரமப்பட்டு அவாளை துாக்கிண்டு மாடி ஏற வேண்டியிருக்கு... இதனால, 'இங்க லிப்ட் வசதி ஏற்படுத்தி தரணும்'னு அவாள்லாம் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வாரி குவிக்கும் சகோதரிகள் சங்கதியை கேளுங்க வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி தாலுகா அலுவலகத்தின் மாடியில, மாநகர சர்வே பிரிவு இருக்கு... இங்க அதிகாரியா இருக்கிறதும், அவங்களுக்கு கீழ, ஒரு ஏரியாவின் சர்வேயரா இருப்பதும், உடன் பிறந்த சகோதரிகள் தான் வே...
''சப் - டிவிஷன் செய்து தனி பட்டா கேட்டு, 'ஆன்லைன்'ல விண்ணப்பிக்கிற பலரது மனுக்களையும், 'போதிய ஆவணங்கள் இல்லை'ன்னு சொல்லி நிராகரிச்சிடுதாங்க... அப்புறம், சம்பந்தப்பட்ட நபரை நேர்ல அழைச்சு, 'கவனிப்பு' வந்ததும், அவங்களுக்கு கையால எழுதப்பட்ட, 'மேனுவல்' பட்டா அனுமதியை குடுத்துடுதாங்க வே...
''இந்த அனுமதியை காட்டி தான் தாசில்தாரிடம் பட்டா வாங்கணும்... வங்கி கடன் வாங்குறதுக்காக சர்வே ஆவணங்கள் கண்டிப்பா வேணும்கிறதால, மக்களும் வேற வழியில்லாம, சகோதரிகள் கேட்கிற தொகையை கட்டுக்கட்டா குடுத்து, பட்டா அனுமதியை வாங்கிட்டு போறாவ... 'சகோதரிகள், மேனுவலா வழங்கிய பட்டா அனுமதிகளை ஆய்வு செஞ்சா, பல முறைகேடுகள் அம்பலமாகும்'னு சக அலுவலர்களே சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''முத்துலட்சுமி மேடம், சூர்யாவிடம் பேசிட்டேளா... என்ன சொன்னாங்க...'' எனக் கேட்டபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
மேலும்
-
காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்தாதீங்க!
-
கன்டெய்னர் ரேஷன் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன
-
மசினகுடி பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
-
சான்றிதழ் பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
-
கண்காணிப்பு கேமரா காட்சிப் பொருளானது
-
மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு