மதகடிப்பட்டில் போலீஸ் பூத் குறைகேட்பு மக்கள் மன்றத்தில் மனு

திருபுவனை : மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் 24 மணி நேரமும் செயல்படும் 'போலீஸ் பூத் அமைக்க வேண்டும்' என பொதுமக்கள் மக்கள் மன்ற கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் சார்பில் திருபுவனை, வில்லியனுார், மங்கலம், திருக்கனுார், காட்டேரிக்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பொதுமக்களிடம் மக்கள் மன்ற குறைகேட்புக் கூட்டம் திருபுவனை காவல் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்த அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு 24 மணி நேரமும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் நிரந்தர போலீஸ் பூத் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவை பொதுமக்கள் எஸ்.பி., யிடம் வழங்கினர்.

Advertisement