'ரெட் அலர்ட்' எதிரொலி; வெள்ளியங்கிரி மலை ஏற தடை

தொண்டாமுத்தூர்; கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.
இந்தாண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த, பிப்., 1 முதல் பக்தர் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். வழக்கமாக, மே 31ம் தேதி மாலை வரை, பக்தர்கள் மலையேற அனுமதிப்பார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த, மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளியங்கிரி மலையில், கடும் மழையிலும் சிலர் மலையேறினர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.