சதுரகிரியில் அனுமதி மறுப்பு: பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்த நிலையில் நேற்று கோயிலுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தாணிப்பாறை, செண்பகத் தோப்பு, சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், அருவிகள், நீரோடை பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால் தடை காரணமாக பக்தர்களை மலையேற போலீசாரும், வனத்துறையினரும் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர். வனத்துறை கேட் முன் கற்பூரம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி திரும்பிச் சென்றனர்.

Advertisement