சாலையில் சுற்றிய இளம்பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்

பூந்தமல்லி:பூந்தமல்லியில், சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர், நேற்று மதியம் கையில் பைகளுடன் அமர்ந்து, தானாக பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அருகில் சென்று அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்த போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசியுள்ளார்.

அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து, அவர் வைத்திருந்த பையில் இருந்த சான்றிதழ்களை பார்த்தனர். அதில், பட்டப்படிப்பு படித்ததற்கான சான்றிதழ்கள் இருந்தன.

அது குறித்து விசாரித்த போது, ஆவடியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக அவர் பணிபுரிந்து வந்ததும், சில மாதங்களுக்கு முன் நின்றுவிட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அப்பெண்ணின் சகோதரர் பாலாஜி என்பவரின் மொபைல் போன் எண்ணை வாங்கி பேசினர்.

அப்போது, அப்பெண் மன அழுத்தத்தில் இருந்ததும், சிகிச்சைக்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததும், ஒரு மாதத்திற்கு முன் வீட்டில் இருந்து சென்றவர், திரும்பி வரவில்லை என்பதும் தெரிந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது உறவினர்களை வரவைத்து, அவர்களிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

Advertisement