20,000 ஏக்கர் பயிர்கள் சேதம்

அரியலுார் மாவட்டத்தில், சில நாட்களாக பெய்த மழையால், 20,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த எள், பருத்தி மற்றும் தானிய பயறுகள் முற்றிலும் சாய்ந்து, நீரில் மூழ்கி சேதமடைந்தன.

அரியலுார் மாவட்டம், தா.பழூர், திருமழபாடி, கண்டராதித்தம், ஏலாக்குறிச்சி, தென்கச்சி பெருமாள்நத்தம், கீழக்குடிகாடு, அடிக்காமலை, கோட்டியால், மூர்த்தியான், பனையடி, பெரியாத்துக்குறிச்சி, இடையாக்குறிச்சி, சிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், இந்தாண்டு விவசாயிகள் சம்பா அறுவடைக்கு பிந்தைய பட்டமாக, எள் மற்றும் பயறு வகைகளை, 20,000 ஏக்கரில் சாகுபடி செய்திருந்தனர்.

இதில், அதிகளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது எள் பூக்கும் தருவாயில், மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

தா.பழூரில் மட்டும், 2,000 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த எள் பயிர்கள் முற்றிலுமாக சாய்ந்து, மழைநீரில் அழுகி கிடக்கின்றன.

கடன் வாங்கி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், இந்த பாதிப்பால் கவலை அடைந்துள்ளனர். மழையால், எள் மட்டுமன்றி நெல், உளுந்து, கடலை பயிர்களும் சேதமடைந்துள்ளன.

Advertisement