ஒரே நாளில் இரு இடங்களில் 'கைவரிசை' காட்டியவர் கைது

சென்னை:போரூர், காரம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 39. கடந்த 23ம் தேதி, வீட்டை பூட்டி, குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சென்றார்.

இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 48 கிராம் வெள்ளி கிண்ணம் மற்றும் 2,100 ரூபாயை மர்ம நபர் திருடியுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், ஜெயசீலனிடம் மொபைல் போனில் புகார் தெரிவித்ததை அடுத்து, அவர் வானகரம் போலீசில் புகார் அளித்தார்.

அதேபோல், வானகரம் போரூர் கார்டன் பேஸ் - 2, மூன்றாவது பிரதான சாலையில் உள்ள அருண்குமார், 38, என்பவரது அலுவலகத்தின் கதவை உடைத்து, உள்ளே இருந்த 2,000 ரூபாயை, மர்ம நபர் திருடி சென்றதாக புகார் வந்தது.

மேற்கண்ட இரு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு திருட்டிலும், ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்படி, திருட்டில் ஈடுபட்ட திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாரிஸ் பிலிப்ஸ், 57, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 48 கிராம் வெள்ளி கிண்ணம், 2,600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement