போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து 'ஜாலி'யாக சுற்றிய சிறை கைதிகள்

8



ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், மனைவி, தோழியருடன் நேரத்தை செலவிடுவதற்காக, சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து, கைதிகள் வெளியே ஜாலியாக சுற்றித்திரிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால், கரண் குப்தா உள்ளிட்ட ஐந்து கைதிகளுக்கு, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பாதுகாப்புக்கு வந்த ஐந்து போலீசாருக்கு, தலா 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்த கைதிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், ஹோட்டல், மதுபான விடுதிகளுக்கு சென்று, மனைவி, தோழியருடன் ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.


ஒரேயொரு கைதி மட்டும், மருத்துவமனைக்கு சென்று, சிறைக்கு திரும்பி உள்ளார்.

கடந்த 24ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால், கரண் குப்தா ஆகிய நான்கு கைதிகள், மாலையில் சிறைக்கு திரும்பவில்லை.


ஒரு கைதி மட்டும் வந்த நிலையில், மற்றவர்கள் வராதது சிறை அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.


விசாரணையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஐந்து போலீசார் கைதிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.


இதன்படி வழக்குப் பதிந்த போலீசார், லஞ்சம் வாங்கிய ஐந்து போலீசார், நான்கு கைதிகள், அவர்களின் உறவினர்கள் நான்கு பேர் என, மொத்தம் 13 பேரை கைது செய்தனர்.

Advertisement