அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

சென்னை: கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
என்று தி.மு.க., அரசுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மோனியா, சல்பூரிக் அமிலம் போன்ற அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் ரப்பர் தொழிலாளர்களுக்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தராதது மட்டுமன்றி, தங்கள் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுபவர்களை இன்று வரை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக, அத்தொழிற்சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை தற்போது பகுதிநேர ஆரம்ப சுகாதார மையமாக தரமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவர் அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அங்கே பணிக்கு வருகிறார் எனவும், அரசு நிறுவனத்தில் பணிபுரியும் தங்களின் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குமுறும் அத்தொழிலாளர்களின் பரிதாப நிலை நம்மைக் கவலையடையச் செய்கிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊழியர் மாநிலக் காப்பீட்டின் கீழ் அவர்களைப் பதிவு செய்வதோடு, அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement