கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் பாதிப்பு? மறுபரிசீலனை செய்ய வலுக்குது கோரிக்கை

கொடுங்கையூர் :கொடுங்கையூர் குப்பை கிடங்கு 350 ஏக்கர் பரப்பு உடையது. தினசரி 2,500 டன் குப்பை கொட்டப்படுகிறது.
இந்த நிலையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 1,248 கோடி ரூபாய் மதிப்பில், 75 ஏக்கர் பரப்பளவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை திட்டத்திற்கு, கடந்த பிப்., 27ல், சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி அளித்துள்ளது.
பெரும் ஆபத்து
சென்னை மாநகராட்சி, 14 மண்டலங்களில் சேகரிக்கப்படும் மக்காத கழிவுகளை, அங்கு எரிக்கப் போவதாக சென்னை மாநகராட்சியின், 'டெண்டர்' அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டன் கணக்கில் குப்பையை எரித்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது, புகை, சாம்பல் துகள்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறும் என குற்றஞ்சாட்டினர். மக்களுக்கு ஆதரவாக, பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் அறிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:
சென்னை நகரில் நாளொன்றுக்கு, 7,600 டன் குப்பை கொட்டப்படுவதாக அண்ணா பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது. 7,600 டன் குப்பையில், மூன்றில் ஒரு பங்கு பிளாஸ்டிக் என கணக்கிட்டு, 2,500 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் கொடுங்கையூரில் எரிக்கும்போது வடசென்னை மக்களின் வாழும் சூழல் பெரும் ஆபத்துக்குள்ளாகும்.
ஒரு அனல்மின் நிலையத்தை விட 65 சதவீதம் அதிகமான கார்பனை, இந்த குப்பை எரி உலை வெளித்தள்ளும்.
சுவாச கோளாறு
இது, ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கார்கள் வெளித்தள்ளும் கார்பனுக்கு சமமானது. இந்த குப்பை எரி உலையில் இருந்து வெளியாகும் சாம்பல் நுண் துகள்கள் காற்றின் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழல் ஏரி உள்ளிட்ட, பல்வேறு நீர்நிலைகளில் கலப்பதுடன், வீடுகளிலும், உணவகங்களிலும் மாசு ஏற்படுத்தும்.
நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும் மெர்குரி, கண், மூக்கு, தொண்டை எரிச்சலை உருவாக்கி சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள், இந்த குப்பை எரி உலையில் இருந்து வெளியேறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடுங்கையூரில் 1,400 டன்; பெருங்குடியில் 700 டன் என, தினசரி 2,100 டன் மக்காத குப்பை எரித்து, மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதில், பெருங்குடி திட்டம் கைவிடப்பட்டு, கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில், 2வது கட்டமாக அத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வெறும் 31 மெகாவாட் மின்சாரத்திற்காக, மக்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும், மாநகராட்சி பணயம் வைக்கிறது.
- விமலா, கவுன்சிலர், மார்க்.கம்யூ.,
சமீபத்தில் குஜராத்தின் ராஜ்கோட், வதோதரா, ஆமதாபாத், ஜாம்நகர் ஆகிய நான்கு நகரங்களில், தினசரி 3,750 டன் குப்பை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை திட்டம் கைவிடப்பட்டது.
இந்த ஆலையால் சுற்று வட்டார மக்கள் தோல் வியாதிகள், ஆஸ்துமா, கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாலும், காற்று மாசுபட்டதாலும், இத்திட்டம் கைவிடப்பட்டது. இதை அரசும், மாநகராட்சி நிர்வாகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.வெற்றிராஜன், அமைப்பு செயலர்,
குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு,
வடசென்னை.
ஐம்பது ஆண்டு கால வரலாற்றில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ., தலைவர் சேகர்பாபு என, மூவர் வடசென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வடசென்னையை வளர்ச்சி நகரமாக மாற்றி வருவதாக கூறி, தற்போது விஷ நகரமாக மாற்றி வருகின்றனர். முதல்வர் தலையிட்டு, எரி உலை திட்டத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும்.
- கீ.சு.குமார், வழக்கறிஞர்.
வடசென்னையை விஷ நகரமாக்கும் கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை, உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் 2ம் தேதி காலை 10:00 மணியளவில், தண்டையார்பேட்டை மண்டலம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, இரு நாட்களுக்கு முன், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
அப்போலோ சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
-
அடரி ஏரியில் மணல் கடத்திய 7 பேர் கைது
-
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ் சமூக ஊடகப் பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
குளத்தில் தள்ளி தொழிலாளி கொலை உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
-
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'