மழைநீர் ஒழுகும் அரசு டவுன் பஸ் சீரமைக்க பயணிகள் கோரிக்கை


கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திலிருந்து மலையாண்டள்ளி, வேலம்பட்டி, சந்துார், வெப்பாலம்பட்டி வழியாக போச்சம்பள்ளிக்கு, 66ஏ அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். இந்த பஸ் காலை, மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்வதால், பொதுமக்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த ஒரே டவுன் பஸ் பல ஆண்டுகளாக இயங்கப்பட்டு வருவதால், சீட் முழுவதும் உடைந்தும், பஸ் கூரை பெயர்ந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் முழுவதும் பஸ்சில் ஒழுகும் நிலையிலும் உள்ளது. இதனால் பல நேரங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவியர் நனைந்தபடியே சிரமத்துடன் பயணிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக, மாவட்டத்தில் பரவலாக மழையால், பஸ்சில் மழை நீர் ஒழுகி, பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்து பயணிகள், புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வரும் ஜூன், 2ல் பள்ளிகள் அனைத்தும் திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பு, இந்த டவுன் பஸ்சை புதுப்பித்தோ அல்லது புதிய டவுன் பஸ்சையோ விட வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement