ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பில் கலெக்டர்!

கன்னியாகுமாரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றுார் பேரூராட்சியில், வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் முருகன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் முருகன். இவரிடம் மணலித்தறவிளையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சுபின் புதிய வீடு ஒன்றை கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கேட்டு அணுகியுள்ளார். ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகன் என்பவர் தானே செயல் அலுவலர் என நடித்து கட்டட வரைபட அனுமதி வழங்க கடந்த 26ம் தேதி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவினர் ஐந்தாயிரம் ரூபாய் ரசாயனம் பூசிய பணத்தை சுபினிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து, செயல் அலுவலராக நடித்த பில் கலெக்டர் முருகனிடம் சுபின் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சால்வன்துரை தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் முருகனை கையும், களவுமாக கைது செய்தனர்