சேப்பாக்கம் அணி அசத்தல் வெற்றி: வீழ்ந்தது திருப்பூர் அணி

கோவை: கேப்டன் அபராஜித் 77 ரன் விளாச, சேப்பாக்கம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் (0) ஏமாற்றினார். ராஜ்குமார் (14) நிலைக்கவில்லை. லோகேஷ் ராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரஹேஜா 27 பந்தில் அரைசதம் எட்டினார். விஜய் சங்கர் பந்தில் ரஹேஜா (79 ரன், 5 சிக்சர், 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். பிரதோஷ் பால் (38) ஓரளவு கைகொடுத்தார்.
திருப்பூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. பிரபஞ்சன் (6), கேப்டன் சாய் கிஷோர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் அணி சார்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


அபராஜித் அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (2) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய மோகித் ஹரிகரன், 22 பந்தில், 46 ரன் விளாசினார். பின் இணைந்த கேப்டன் பாபா அபராஜித், விஜய் சங்கர் ஜோடி கைகொடுத்தது. சிலம்பரசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபாரஜித், 38 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த சங்கர், 3 சிக்சர் பறக்கவிட்டார். சிலம்பரசன் வீசிய 16வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட அபராஜித் வெற்றியை உறுதி செய்தார்.
சேப்பாக்கம் அணி 16 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித் (77), சங்கர் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement