காலே டெஸ்ட்: யாருக்கு வாய்ப்பு

காலே: இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 368 ரன் எடுத்து, 127 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் டிசில்வா (19) விரைவில் வெளியேறினார். கமிந்து மெண்டிஸ், அரைசதம் அடித்தார். மிலன் ரத்னாயகே, 39 ரன் எடுத்தார். மெண்டிஸ், 87 ரன்னுக்கு அவுட்டானார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நயீம் ஹசன் 5 விக்கெட் சாய்த்தார்.
ஷாத்மன் அபாரம்
வங்கதேச அணி 10 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. அனாமுல் ஹக் (4), மோமினுல் ஹக் (14) அவுட்டாகினர். ஷாத்மன் இஸ்லாம், 76 ரன் எடுத்தார். கேப்டன் நஜ்முல் ஷாண்டோ அரைசதம் அடித்தார். நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 177/3 ரன் எடுத்து, 187 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஷாண்டோ (56), முஷ்பிகுர் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம். ஆடுகளத்தில் வெடிப்பு காணப்படுகிறது. வங்கதேச பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால், வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

Advertisement