மறைமலை நகரில் பொதுவெளியில் திறந்தவெளி மதுக்கூடம் 'குடி'மகன்களால் பொதுமக்கள் அவதி

மறைமலை நகர்:மறைமலை நகர் பகுதியில் பொது வெளியில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மறைமலைநகர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த நகராட்சி 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டுகள் உள்ளன. இங்கு 19,168 குடியிருப்புகள் உள்ளன.
இதில் 80,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு மக்கள் தொகை அதிகரித்து பல்வேறு குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 400க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.
சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.
மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரத்தில் ஒன்று, அண்ணா சாலையில் மூன்று, பாவேந்தர் சாலையில் ஒன்று என இந்த பகுதியில் மொத்தம் ஐந்து டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் பார் வசதி இல்லை.
இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகள், கோவில் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் உள்ளதால் தினமும் அப்பகுதிவாசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
அண்ணா சாலை மற்றும் பாவேந்தர் சாலை டாஸ்மாக் கடையில் மது வாங்கும் நபர்கள் கூட்டமாக சாலை ஓரம் உள்ள நடைபாதை, நின்னகரை ஏரி நடைபாதை பூங்கா போன்ற இடங்களில் அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் இந்த வழியாக செல்லவே அச்சமாக உள்ளது.
மது போதையில் தன்னிலை மறந்து சாலையில் கிடக்கின்றனர். கோவில் மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த டாஸ்மாக் கடைகள் மாற்றப்படாமல் உள்ளது.
பாவேந்தர் சாலையில் உள்ள கடையை மூட வேண்டும் என பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் இந்த பகுதியில் குடிமகன்களால் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'கட்டிங்' விற்பனை ஜோர்
சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் இரு மடங்கு விலையில் மது விற்பனை நடக்கிறது.
இங்கு குவார்ட்டர் மது இரண்டாக பிரிக்கப்பட்டு 'கட்டிங்' 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் குடிமகன்கள் காலையிலேயே இங்கு சென்று விடுகின்றனர்.
கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை
-
மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
‛எங்களையே சுற்றி சுற்றி வருகிறீர்கள் நயினார் நாகேந்திரன் சலிப்பு