பர்மிங்ஹாமில் 'சுழல்' சூறாவளி வீசுமா: குல்தீப் யாதவ் இடம் பெறுவாரா

பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்க இந்திய அணி காத்திருக்கிறது. 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷாப் (2) சதம் அடிக்க, இந்தியா 835 ரன் (471, 364) குவித்தது. இருப்பினும் பவுலர்கள் சொதப்பியதால், தோல்வியை தழுவியது.

மாற்றம் நிச்சயம்: இரண்டாவது டெஸ்ட் நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இதனை உணர்ந்து இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படலாம். லீட்ஸ் டெஸ்டில் ஷர்துல் தாகூர் (1, 4 ரன், 16 ஓவரில் 2 விக்கெட்) சோபிக்கவில்லை. இவருக்கு பதில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் சேர்க்கப்படலாம். பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் இடம் பெறலாம். பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டால், அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் வாய்ப்பு பெறலாம்.


குல்தீப் நம்பிக்கை: எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். நேற்றைய வலை பயிற்சியின் போது லண்டனில் உள்ள 'ஸ்பின்னர்' ஹர்பிரீத் பிராரை கேப்டன் சுப்மன் அழைத்தார். இவரது பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டார். சுழலுக்கு சுப்மன் முக்கியத்துவம் அளிப்பதால், குல்தீப் இடம் பெறுவது உறுதி. இங்கிலாந்துக்கு எதிராக 11 இன்னிங்சில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2024ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணி தொடரை இழக்க முக்கிய காரணமாக இருந்தார். அப்போது 4 போட்டியில் 19 விக்கெட் வீழ்த்தினார். இதில், தர்மசாலா டெஸ்டில் மொத்தம் 7/112 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருது வென்றார். எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலிய 'ஸ்பின் கிங்' ஷேன் வார்ன் 4 போட்டியில் 25 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 முறை 5 விக்கெட், ஒரு முறை 10 விக்கெட் சாய்த்துள்ளார். இவரை பின்பற்றி மணிக்கட்டு 'ஸ்பின்னரான' குல்தீப் சாதிக்க வேண்டும்.


இருவர் உறுதி: இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே கூறுகையில்,''பர்மிங்ஹாம் டெஸ்டில் பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. பயிற்சியில் ஜடேஜா, குல்தீப், வாஷிங்டன் என 3 'ஸ்பின்னர்'களும் முத்திரை பதித்தனர். வாஷிங்டன் பேட்டிங்கிலும் அசத்தினார். இரண்டு 'ஸ்பின்னர்'கள் விளையாடுவது உறுதி. அவர்கள் யார் என்பதை இறுதி செய்யவில்லை. நிதிஷ் குமார் வாய்ப்பு பெறலாம். நிறைய 'கேட்ச்' நழுவவிட்ட ஜெய்ஸ்வாலுக்கு 'ஸ்லிப்' பகுதியில் இருந்து 'பிரேக்' கொடுக்கப்படுகிறது. 'ஸ்லிப்' பகுதியை கருண் நாயர், கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன், நிதிஷ் குமார், சுதர்சன் கவனித்துக் கொள்வர்,''என்றார்.

@quote@

அதே அணி


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'வேகப்புயல்' ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை. அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிராவ்லே, பென் டக்கெட், போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷிர்.quote

Advertisement