பிச்சை எடுத்த சிறுமி பலாத்காரம்: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கை::
இளையான்குடி பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் நாகமுத்தான்குடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சமையன் 45. விவசாயியான இவர் 2013ல் இளையான்குடி பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்த 10 வயது சிறுமியை தன்னுடைய வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் அந்த சிறுமியை இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள் சையது அபுதாஹிர் 31, முகமது ரியாஸ் 29, முகமது யாசின் 30, நவ்சத்கான் 33 ஆகிய 4 பேரும் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி பஸ் ஸ்டாண்டில் சுற்றியதை பார்த்த சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழு சிறுமியை மீட்டு விசாரித்ததில் அவர் தனக்கு நடந்தது குறித்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் சிறுமிக்கு பெற்றோர் இல்லாததும், பட்டியலின சமுதாயத்தை சேர்ந்ததும் தெரியவந்தது. எனவே இந்த வழக்கு விசாரணை சிவகாசி தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரணையின் போது முகமது யாசின் இறந்தார். சமையன், சையது அபுதாஹிர், முகமது ரியாஸ், நவ்சத்கான் ஆகிய 4 பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 7 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி பார்த்தசாரதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement