ஸ்டெர்லைட் ஆலை திறக்க கலெக்டரிடம் மீண்டும் மனு

1

துாத்துக்குடி::
'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒப்பந்த தொழிலாளர்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

துாத்துக்குடி சிப்காட்டில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு, 2018ல் சீல் வைக்கப்பட்டது. தற்போது ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க, பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:

ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளதால், ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் உட்பட ஏராளமான மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஆலை இயங்கியபோது, எங்களை போல பல ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தோம். எங்களுக்கு போதிய வருவாய் கிடைத்தது.

ஆலை மூடப்பட்ட பின் கொரோனா காலத்தில், 80 நாட்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி வழங்கினர். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால், பல ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் வேலையின்றி வறுமையில் உள்ளோம்.

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையையும், ஸ்டெர்லைட் அனல்மின் நிலையத்தையும் உடனடியாக திறக்க தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement