போலீஸ் செய்தி

தற்கொலை

சாத்துார்: சாத்துார் மேல ஒட்டம் பட்டியை சேர்ந்தவர் குமார், 43.அடிக்கடி மது குடித்து வந்ததை குடும்பத்தினர் கண்டித்தனர்.மனமுடைந்த அவர் ஜூன் 27ல் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் ஜூலை 29 இரவு 10: 20 மணிக்கு பலியானார். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் மீது போக்சோ வழக்கு

சாத்துார்: சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 22. 16 வயது சிறுமிக்கு அலைபேசியில் ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை தந்துள்ளார்.சிறுமி போலீசில் புகார் செய்தார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

கூட்டுறவு மில்லில் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தற்போது செயல்படாமல் மூடி கிடக்கிறது. தற்போது வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் மில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்டின் கூரையில் போடப்பட்டிருந்த இரும்பு பட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வி.ஏ.ஓ. கிருஷ்ணன் புகாரில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி காயம்

சாத்துார்: திருத்தங்கலை சேர்ந்தவர் ஜோசப் ,56. கட்டட தொழிலாளி, நேற்று புனலுார் செல்வதற்காக சாத்துார் ரயில் நிலையம் வந்தார். துாத்துக்குடி -ஒகா செல்லும் ரயில் நகர்ந்து கொண்டிருந்த போது ஏற முயன்றார். கால் இடறி பிளாட்பாரத்திற்கும் படிக்கும் இடையில் சிக்கியதில் கால் முறிந்தது. சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement