பரமக்குடியை வந்தடைந்த வைகை அணை பாசனநீர் கழிவு நீர் கலக்கும் அவலம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் பரமக்குடியை கடந்து சென்றது. கழிவுநீர் கலப்பால் நீர் நிறம்மாறியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பூர்வீக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக ஜூன் 25ல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை பூர்வீக பாசன பகுதி 2,3ல் உள்ள நிலங்களுக்கு 7 நாட்கள் என 1251 மில்லியன் கனஅடி வெளியேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 2 நாட்கள் 3000கன அடி, அடுத்தடுத்த 2 நாட்களுக்கு 2000,1500 கன அடி வீதமும், 7ம் நாளான இன்று 1479 கன அடியாகவும் குறைக்கப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இதனால் பல லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பயனடையும்.

தொடர்ந்து வைகைநீர் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பரமக்குடி ஆற்றை கடந்து செல்கிறது. ஏற்கனவே ஆற்றில் கழிவு நீர் தேங்கி ஏராளமான பள்ளங்கள் உருவெடுத்துள்ளது.

இதனால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வைகை ஆற்று நீர் ஒட்டுமொத்த கழிவு நீருடன் கலந்து செல்வதால் தண்ணீரின் நிறம் மாறி உள்ளது. வைகையை துாய்மையாக வைத்திருப்பதுடன், ஆற்று நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement