உயிர் காக்கும் மருந்துகள் அரசு மருத்துவமனைக்கு சப்ளை

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் மாத்திரை, மருந்துகள் கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சையில் வழங்கப்படும் 'டாமோக்சிபென்' என்ற மாத்திரை இல்லை.

கடுமையான காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி போன்ற மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு மருந்துகளால் வயிற்றில் புண் ஏற்படும்.

இதனை தவிர்க்க பயன்படும் 'பான்டோபிரசோல்' என்ற ஊசி மருந்தும் இல்லை. இது போன்று ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைகளுக்கான மருந்து, மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 29ல் செய்தி வெளியானது. இதன் காரணமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தட்டுபாடுள்ள மருந்து, மாத்திரைகளை உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement