போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறதுகட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்கிறது உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறது. கட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.
மதுரை நிலையூர் மேகலா தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை வடிவேல்கரையில் உள்ள டாஸ்மாக் கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய உள்ளனர். அருகில் குடியிருப்புகள், பள்ளி உள்ளன. மது அருந்துவோரால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கடையை நிலையூருக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: 5 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, மது போதை மறுவாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன என தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பிறப்பித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
அரசு தரப்பு: 800 முதல் 900 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 28 மது போதை மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைக்கு எதிராக புகார் வந்தால் 30 நாட்களில் கலெக்டர் முடிவெடுக்க விதிகளில் இடம் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: சுகாதாரம், மக்களின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தருவதுதான் அரசின் கடமை. ஒருபுறம் மருத்துவமனைகளை துவக்கிவிட்டு, மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை துவக்குவது முரண்பாடாக உள்ளது. மாநில அரசே டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனையை ஊக்கப்படுத்துகிறது.
முன்பு சினிமாக்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்தது. தற்போது போதை, வன்முறைக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றால் சமூகம் சீரழிகிறது. கட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்கிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை நடக்கிறது. மக்களை பாதுகாக்க ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த சட்டம் கொண்டு வந்ததாக அரசு கூறுகிறது. மறுபுறம் நாங்கள் யாரையும் மது அருந்த கூறவில்லை; ஊக்குவிக்கவில்லை எனக்கூறும் அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதுதான் அரசின் கடமை.
அரசு தரப்பு: ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது. படிப்படியாக அக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தஞ்சாவூர் அரசப்பன்,'தஞ்சாவூர் எம்.கே.எம். ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகே கோயில் உள்ளது. டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள்: தமிழக முதல்வர் ஜூன் 15, 16 ல் தஞ்சாவூர் வந்தபோது எம்.கே.எம். ரோடு டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.
அரசு தரப்பு: பொது நிகழ்ச்சிகள் நடைபெறும்போது குறிப்பிட்ட பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்படுவது வழக்கம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இரு வழக்குகளின் விசாரணையை ஜூலை 7க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும்
-
விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி
-
திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
-
டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
கிரெடிட் கார்டு, பான்-ஆதார் இணைப்பு; இன்று முதல் அமலான புதிய மாற்றங்கள்
-
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
-
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து எருமனுாரில் சாலை மறியல்