பஸ்கள் நேருக்கு நேர் மோதல் தான்சானியாவில் 40 பேர் பலி

டொடோமா : தான்சானியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில், 40 பேர் உயிரிழந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில், சபாசபா பகுதியில், 50 பேருடன் ஒரு சொகுசு பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பஸ் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், எதிரே வந்த மற்றொரு சொகுசு பஸ் மீது மோதியது. மிகவும் வேகத்துடன் மோதியதில், இரண்டு பஸ்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த கோர விபத்தில், இரண்டு பஸ்களில் பயணித்த, 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலத்த தீக்காயங்கள் காரணமாக, உயிர்இழந்தவர்களில், பலர் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்துக்கு தான்சானியா அசிபர் சாமியா சுலுஹு ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Advertisement