ராணுவ பிரதிநிதி சர்ச்சை கருத்து இந்திய துாதரகம் விளக்கம்

1

புதுடில்லி : அரசியல் அழுத்தங்களால், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய விமானப் படை சில போர் விமானங்களை இழந்ததாக, இந்தோனேஷியாவுக்கான இந்திய துாதரகத்தில் உள்ள நம் ராணுவ பிரதிநிதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், உரிய விளக்கமும் அளித்துள்ளது.

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில், நம் துாதரகத்தின் ராணுவ பிரதிநிதியாக இந்திய கடற்படை கேப்டன் சிவ் குமார் உள்ளார். அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசுகையில், 'பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, இந்திய விமானப்படை சில போர் விமானங்களை இழந்தது. இதற்கு, அரசியல் அழுத்தங்களே காரணம்.

'பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கக்கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. எனினும், பிரம்மோஸ் ஏவுகணைகள் வாயிலாக அவர்களின் நிலைகளை அழிக்க முடிந்தது' என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டு, மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டியது. இந்தோனேஷியாவில் உள்ள இந்திய துாதரகம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இது குறித்து சமூக வலைதளத்தில் இந்திய துாதரகம் வெளியிட்ட பதிவில், 'கடற்படை அதிகாரியின் கருத்து, ஊடகங்களில் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அக்கருத்தரங்கில் திரையிடப்பட்ட விளக்கப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதுடன், அதை அறியாமல் தொகுப்பாளர் தவறாக மேற்கோள் காட்டியுள்ளார்' என தெரிவித்துள்ளது.

Advertisement