பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன்

7

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ.,வினரை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

அவரது அறிக்கை:


உள்துறை அமைச்சர் அமித் ஷா வை அவதூறாக பேசிய எம்.பி.,ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்.

காவல்துறையின் அராஜகப்போக்கால் சிவகங்கை இளைஞர் அஜித் குமார் பலியான நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், இன்று காலை பா.ஜ.,நிர்வாகி பிரவீன் ராஜ் அவர்களையும், மாலையில் அறவழியில் போராடிய நமது மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியை கைது செய்துள்ளது தி.மு.க., அரசு.

சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தும் இந்த திமுக ஆட்சியின் அதிகார மமதையே 2026ல் அவர்களை வீட்டிற்கு அனுப்பும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement