7 ஒன்றிய மக்கள் பயன் பெற ரூ.900 கோடியில் குடிநீர் திட்டம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 900 கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர்திட்டத்துக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது, என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

வெள்ளகோவில் ஒன்றியம், அய்யம்பாளையத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை திறந்து வைத்து, அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் மொத்தம், 86 எண்ணிக்கையில் துவக்கப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பாட்டில் உள்ள குழாய்கள் சேதமடைந்துள்ளன. அவை, 55 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மாற்றப்படும். மேலும், காவிரி ஆற்றில் சோழசிரோண்மணியிலிருந்து, ஈரோடு மாவட்டம், வடுகபட்டி வழியாக, திருப்பூர் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது.

அவ்வகையில் ஏழு ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 1,252 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டம், 900 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும். இதற்கான பூர்வாங்க பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement