சூரை மீன்பிடி துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த பைபர் படகு

திருவொற்றியூர், திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், நள்ளிரவில் பைபர் படகு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூரில், 272 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட சூரை மீன்பிடி துறைமுகத்தை, கடந்த மே 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இங்கிருந்து, 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றன. விசைப்படகுகள் இன்னும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், திருவொற்றியூர் பலகைத்தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன் என்பவரின் பைபர் படகில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் தீ வைத்து தப்பி உள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள், தண்ணீர் ஊற்றி உடனே தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்திற்குள்ளான படகை நேற்று பார்வையிட்ட, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், பாதிக்கப்பட்ட மீனவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''சூரை மீன்பிடி துறைமுகத்தில் உள்ளே பல்வேறு அலுவலக கட்டடங்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் யாரும் வராததால் காலியாக உள்ளது. அறை இருந்தும், பாதுகாவலரை கூட அரசு இதுவரை நியமிக்கவில்லை,'' என குற்றம்சாட்டினார்.

Advertisement