ஆமை வேகத்தில் அ.தி.மு.க., - ஐ.டி., அணி; கட்டமைப்பை மாற்றியமைக்க போர்க்கொடி

1


அ.தி.மு.க., - ஐ.டி., அணி ஆமை வேகத்தில் நகருகிறது என்பதால், அதன் நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, அக்கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:



சிவகங்கை மாவட்டம், கீழடி விவகாரத்தில், தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கருதுவது போல, உடம்பில் துணி இல்லாமல் துாங்கும் கேலிச்சித்திரத்தை, சமூக வலைதளங்களில் தி.மு.க., - ஐ.டி., அணி வெளியிட்டது.


இதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேலிச்சித்திர விவகாரத்தில். அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணியினர், உடனே தக்க பதிலடி தராமல் இருந்ததால், கட்சியின் மூத்த முன்னோடிகள் கோபம் அடைந்தனர்.


துாங்கி வழியும் ஐ.டி., அணி நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,விடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, திட்டமிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தி.மு.க.,வின் தேர்தல் வியூக நிபுணருடன் ரகசிய கூட்டு வைத்து, உட்கட்சி ரகசியங்களை கசிய விடுவதாகவும், மூத்த முன்னோடிகள் புகார் தெரிவிக்கின்றனர். வட மாவட்டத்தை முன்னாள் அமைச்சர் ஒருவர், 'நம் ஐ.டி., அணி வலுவாக இல்லை. அதன் தலைமை சரியில்லை.



தி.மு.க., - ஐ.டி., அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை என்றால், நம் அணியை கலைத்துவிட்டு, புதிய கட்டமைப்பு உருவாக்குங்கள்' என, கோபாவேசமாகக் கூறியுள்ளார்.


இதையடுத்து, கடந்த 27, 28 ஆகிய தேதிகளில், அ.தி.மு.க., - ஐ.டி., அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டது.


அக்கூட்டத்திற்கு நகர, ஒன்றிய அளவில் ஐ.டி., அணியில் இருக்கும் நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை என்ற அதிருப்தியும் உருவாகியுள்ளது. மேலும், சில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.


சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி., அணி நிர்வாகி, தனக்கு தற்போதுதான் திருமணமாகி உள்ளதால், தேன்நிலவுக்கு செல்வதாகக் கூறி கடிதம் கொடுத்துவிட்டு, 'ஆப்சென்ட்' ஆகியுள்ளார். ஆனால், அவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்துவிட்டது.


இப்படி அ.தி.மு.க., - ஐ.டி., அணி, ஆமை வேகத்தில் செயல்படுவதோடு, கட்சியினர் பலரின்
அதிருப்திக்கும் ஆளாகி இருப்பதால், அந்த அணியின் பலமட்ட நிர்வாகிகளையும் மாற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி உள்ளது.


@block_B@

தவறுகளை பதிவிடவில்லை!

இதுகுறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாவது:ஐ.டி., அணியில், 70,000 நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் தகவல்கள், உள்ளூர் மக்களின் பிரச்னைகள் அதிகமாக பதிவிடப்படாமல் இருக்கின்றன. ஆனால், ஐ.டி., அணியை தான் பழனிசாமி முழுமையாக நம்பி உள்ளார். அவரது நம்பிக்கை பொய்க்கும் வகையில், ஐ.டி., அணியினர் செயல்படுவதாக புகார் வந்துள்ளது. ஐ.டி., அணி மீது தனிகவனம் செலுத்த, பழனிசாமி முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.block_B



- நமது நிருபர் -

Advertisement