150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்



சேலம், அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய, மகபூப் அலி தலைமையில் கிளை நிர்வாகிகள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களுக்கு, கட்சி துண்டு அணிவித்து வரவேற்ற பின், அமைச்சர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., அரசு சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அளிக்கும். அவர்களுக்கு பாதிப்பு எனில் முதல் ஆளாக குரல் கொடுக்கும் கட்சி என்பதால், சிறுபான்மையினர் அதிகளவில், மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைகின்றனர். உங்கள் நம்பிக்கையை என்றும் காப்பாற்றும் கட்சியாக, தி.மு.க., விளங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நாசர்கான், மாநகர செயலர் ரகுபதி, பகுதி செயலர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.பட்டணம்
அ.தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலர் தங்க தமிழ்செல்வன், பா.ம.க.,வின், ஊராட்சி முன்னாள் உறுப்பினர் மகாலிங்கம், பா.ஜ., நிர்வாகி பாரதி ஆகியோர், அந்தந்த கட்சிகளில் இருந்து விலகினர். இவர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் நேற்று, அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement