கெண்டேஒசஹள்ளி பறவைகள் சரணாலயம்

சர்க்கரை நாடு என்று அழைக்கப்படும் மாண்டியா, கரும்பு உற்பத்திக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் கார்டன், பீமேஸ்வரி, ரங்கனதிட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மாண்டியா மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

பறவைகள் சரணாலயம் என்றாலே ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கனதிட்டு மட்டும் தான் உள்ளது என்று சுற்றுலா பயணியர் நினைக்கின்றனர். ஆனால், சுற்றுலா பயணியரால் அதிகம் அறியப்படாத இன்னொரு பறவைகள் சரணாலயமும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்து உள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டணாவில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் உள்ளது கெண்டேஒசஹள்ளி கிராமம். இந்த கிராமமும் காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்து உள்ளது. ரங்கனதிட்டுவை போன்று கெண்டேஒசஹள்ளியில் உள்ள சரணாலயத்திற்கும் ஆண்டு முழுதும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.

கிரே ஹெரான், பர்பிள் ஹெரான், கிரேட் ஈக்ரட், பிளாக் கிட், ஆசியன் கிரீன் பீ ஈட்டர், புளு டெய்ல்ட் பீ ஈட்டர், லிட்டில் கார்மோரன்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளை இங்கு காணலாம்.

ஸ்ரீரங்கப்பட்டணாவில் இருந்து அரகெரே வழியாக கெண்டே ஒசஹள்ளி கிராமத்திற்கு செல்ல வேண்டும். சரணாலயத்திற்கு செல்லும் வழியில் இருபக்கம் தென்னை மரங்கள், பச்சை பசலேன வயல் வெளி உள்ளது. இயற்கை காட்சிகளை பார்த்தபடி செல்லும் அனுபவம் கிடைக்கும்.

காவிரி ஆற்றின் பாறைகள் மீது அமர்ந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம். பறவைகளை கண்டு ரசிக்கவும், குடும்பத்தினருடன் ஒரு நாள் பொழுதை போக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.

டிக்கெட் கட்டணம் பெரியவர்களுக்கு 75 ரூபாய், குழந்தைகளுக்கு 25 ரூபாய்.

பெங்களூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணா 126 கி.மீ., துாரத்தில் உள்ளது.

சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணா செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் சென்று ஸ்ரீரங்கப்பட்டணாவில் இறங்கி அங்கிருந்து டி.நரசிபுரா செல்லும் டவுன் பஸ்களில் சென்றால், கெண்டேஒசஹள்ளி செல்லலாம்.


ரயிலில் செல்பவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணா ரயில் நிலையத்தில் இறங்கி, டவுன் பஸ் அல்லது வாடகை காரில் செல்லலாம்

- நமது நிருபர் -.

Advertisement