ஹென்னுார் மூங்கில் காட்டில் சைக்கிள் பயணம்

பெங்களூரில் வசிப்போர் வார இறுதி நாட்களை அமைதியான முறையில் செலவிட ஏற்ற இடம் தான் ஹென்னுார் மூங்கில் காடு. இதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு, பாகலூரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள பெலஹள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது ஹென்னுார் மூங்கில் காடு. இது சிட்டி அவுட்டர் ரிங் ரோட்டிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த மூங்கில் காடுகளில் ஏராளமான மூங்கில் மரங்கள் மட்டுமின்றி பல வகை மரங்களும் உள்ளன.

இங்கு பல பறவை இனங்கள் வசிக்கின்றன. சீசனுக்கு ஏற்ப வெளிநாட்டு பறவைகளும் வருவது வழக்கம். இந்த பறவைகளை பார்த்து மகிழலாம். புகைப்பட கலைஞர்கள் தங்களது கேமராவுக்கு வேலை கொடுக்க சரியான இடம்.

எந்த பக்கம் பார்த்தாலும், பச்சையாகவே காட்சி அளிக்கிறது. இங்கு, காலை, மாலை நேரங்களில் சைக்களிங், நடைபயிற்சி செய்ய அனுமதி உண்டு.

இந்த வேளையில் அதிக மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடியும்.இந்த மூங்கில் காடு உள்ள பகுதியில், மாரெனஹள்ளி பண்டே கல் குவாரியும் உள்ளது. கல் குவாரியின் நடுவே சிறிய குட்டை உள்ளது. இந்த கல் குவாரி தற்போது செயல்படுவதில்லை. இதனால், அனைத்து இடங்களையும் அருகில் சென்று பார்க்கலாம்.

இந்த இரண்டு இடங்களையும் இயற்கை பிரியர்கள், அமைதி விரும்பிகள் தாராளமாக சென்று சுற்றிப்பார்க்கலாம். இங்கு செல்ல விரும்புவோர் சைக்கிளில் செல்வது சிறப்பு. சைக்கிளிங் செய்வதற்கு உகந்த இடமாக உள்ளது. மூங்கில் காடுகளுக்கு நடுவே மணல் பாதையில் சைக்கிளிங் செய்யும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்.

இந்த இடத்திற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, பைக், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வது சிறப்பாகும். குறிப்பாக, சைக்கிளுடன் செல்வது மிக சிறப்பான தேர்வாக இருக்கும்.

சைக்களில் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிந்து செல்வது நன்று. ஏனெனில், காடுகளில் சைக்கிள் ஒட்டும் போது, எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்துகளின் போது ஏற்படும் காயங்களை தவிர்க்க முடியும்.


இங்கு காலை, மாலை நேரங்களில் செல்வது சிறப்பு.

- நமது நிருபர் -

Advertisement