என் உயிரே போனாலும் பரவாயில்லை; அஜித் குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

24


சிவகங்கை: 'அஜித்குமாருக்கு நேர்ந்த சம்பவத்தில் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால், கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்' என்று கோவில் காவலாளி தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அஜித் குமாருக்கு நடந்த சம்பவத்தை பாத்ரூமில் இருந்து வீடியோ எடுத்தது நான் தான். சம்பவம் நடக்கும் போது நான் இருந்தேன். நடந்த அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறினேன். நீதிபதி விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே குற்றப்பின்னணி இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், ஒரு சிலர் தவறுதலாக என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். பெயர் சொல்ல விரும்பவில்லை. முதன் முதலில் அவரை (அஜித்குமார்) நாங்க தான் அடித்து கொண்டு வந்து ஒப்படைத்ததாக கூறுகின்றனர். நான் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், நான் எதற்கு வீடியோ எடுக்கப் போகிறேன்.


விசாரணையில் உண்மை தெரிய வரும். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் என் மீது சொல்கிறார்கள். அஜித்துக்கு நேர்ந்த சம்பவத்தில் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால், கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். 'மாமா' என்று தான் கூப்பிடுவான்.


ஐகோர்ட் நீதிபதியே எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று உத்தரவிட்டார். எனக்கு பிரச்னை இல்லை. என் உயிர் போனால் கூட கவலைப்படவில்லை. நான் முன் வந்த பிறகு தான், பிற சாட்சிகளும் தயாரானார்கள். ஆனால், தற்போது அவர்கள் பயப்படும் சூழல் உருவாகியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லாவற்றிற்கும் துணிந்து தான் ரெடியாக இருக்கிறேன். அரசையும், அதிகாரிகளையும் குறை சொல்லவில்லை. அன்று நடந்த சம்பவம் குற்றம். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆதரவு கொடுத்த மீடியாவுக்கு நன்றி.


எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும். அந்த சம்பவத்தின் போது உடன் இருந்த இளைஞர்கள் ரொம்ப பயந்து இருக்கிறார்கள். ஏற்கனவே, அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாத அவர்கள், தற்போது போலீஸூக்கு எதிராக போகும் போது, வெளியே சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று எனக்கு தெரியும். அவன் வாயை மூட வேண்டும் என்பதற்காகத் தான், இதனை சொல்கிறேன். காவலர் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் தான் மிரட்டினார்கள். வேண்டுமெனில், ராஜாவின் தொலைபேசி உரையாடல் விபரங்களை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும்.


நாங்க யாரும் அஜித்தை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை. திருப்புவனம் காவல்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த பிறகு இன்ஸ்பெக்டர் கூறினார். நாங்களும் சரி என்று கூறி விட்டு வந்தோம். நவீன் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித் குமாருடன் இருந்த பையனும் கண்முன்னாடி நடந்ததை சொல்லி விட்டான். நானும் சொல்லி விட்டேன். எனக்கு தூக்கமே வரவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement