மேற்கு தொடர்ச்சி மலையில் பெல்கல் தீர்த்த நீர்வீழ்ச்சி

கோவில்கள் நிறைந்த உடுப்பி மாவட்டத்தில் பெல்கல் தீர்த்த நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இதை கோவிந்தா தீர்த்த நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயம் வழியாக இந்நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் செல்லும் வழியில் வனவிலங்குகளை பார்க்கலாம். அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளதால், மலை காலத்தில் நீங்கள் சென்றால், தொலைவில் இருந்தே, பெல்கல் நீர்வீழ்ச்சியை சுற்றி நான்கைந்து சிறிய நீர்வீழ்ச்சிகளை காண முடியும்.

இரு சக்கர வாகனத்தில் செல்வது சுலபம். குறிப்பிட்ட துாரம் வரை சாலை இருக்கும். அதன்பின் மண் சாலை தான். மழை காலத்தில் சேறும், சகதியுமாக தென்படும். உஷாராக செல்ல வேண்டும்.

நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதிக்கு சென்று விட்டீர்கள் என்பதை உணரும் வகையில், ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் ஒலியை கேட்கலாம். 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் நீர், பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

சாகச பிரியர்கள், மலையேற்ற விரும்பிகளுக்கு இது ஏற்ற இடம். கரையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கலாம்.


ஆர்ப்பரித்து கொட்டும் பெல்கல் தீர்த்த நீர்வீழ்ச்சி

- நமது நிருபர் -.

Advertisement