எம்.பி., திறந்த குடிநீர் குழாய் விழா முடிந்ததும் திடீர் மாயம்

7

எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில், ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட குழாயை, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி மீண்டும் விழா நடத்தி திறந்து வைத்தார். ஆனால், அந்த குழாய், விழா முடிந்த சிறிது நேரத்தில் மாயமானது.

எரியோடு மகாத்மா நகரில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 17 லட்சம் ரூபாய் செலவில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

அதை ஜூன் 19ல், வேடசந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார்.

இந்நிலையில் தன் நிதியில் கட்டிய திட்டம் என்பதால், ஜோதிமணி எம்.பி.,யும் ஒரு விழா நடத்த முடிவு செய்தார்.

இதற்காக நேற்று முன்தினம் அப்பகுதியில் புதிதாக ஒரு குடிநீர் குழாய் அமைத்தனர். அதையும், மேல்நிலைத் தொட்டியையும் நேற்று ஜோதிமணி திறந்து வைத்தார்.

அப்பகுதியினர் சிறிது நேரம் தண்ணீரும் பிடித்து சென்றனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில், அங்கிருந்த குடிநீர் குழாய் மாயமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர்.

பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழாவிற்காக தற்காலிக ஏற்பாடாக பைப்கள் பதிக்கப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. விழா முடிந்ததும் அகற்றப்பட்டுள்ளது.

பைப் பதிக்கும் பணி முழுமையானதும் குழாய்கள் அமைக்கப்படும்' என்றனர். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மாயமாகாமல் தப்பியதே என மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement