கஞ்சா செடியின் விதைகள், இலைகள் வைத்திருப்பது குற்றமல்ல: கோர்ட்

அமராவதி: 'கஞ்சா செடியின் விதைகள், இலைகள் வைத்திருப்பது போதைப் பொருள் வைத்திருப்பதற்கான சட்ட வரையறைக்குள் வராது' என, ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த இருவர், கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா செடியின் இலைகள் மற்றும் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும், தங்களை ஜாமினில் விடுவிக்கக் கோரி, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில், 'கஞ்சா எனப்படும் போதை வஸ்துவை நாங்கள் வைத்திருக்கவில்லை. மாறாக, கஞ்சா செடியின் விதைகள் மற்றும் இலைகளை வைத்திருந்தோம். ஆகையால், எங்களை ஜாமினில் விட வேண்டும்' என, கோரினர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், அதே கருத்தை வலியுறுத்தினார். அது தொடர்பான பிற நீதிமன்ற தீர்ப்புகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கஞ்சா செடிகளில் பூக்கும் பூ அல்லது பழங்களின் மேல்பகுதியே போதை பொருட்களாக கருதப்படுகின்றன. அந்த செடியின் இலைகள் அல்லது விதைகளை போதைப் பொருட்களாக கருத முடியாது.

அவை, போதை மருந்து மற்றும் மனநோய் மருந்து தடுப்பு சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டதல்ல.

சட்டப்பூர்வமாக அதற்கு தடை விதிக்கவும் முடியாது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போதை வஸ்துக்களாக கருதப்படும், கஞ்சா செடியின் பூவோ அல்லது பழங்களின் மேல்பகுதியோ பறிமுதல் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கஞ்சா செடி வளர்ப்பது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள சூழலில், நீதிபதியின் இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்குகளில், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை இது பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement