சினை மாட்டை வண்டியில் ஏற்றும்போது எலும்பு முறிவு சாலையிலேயே விட்டுச்சென்ற மாநகராட்சி அலுவலர்கள்

சென்னை, மயிலாப்பூரில், உரிமையாளர் வீட்டிற்கு ஓட்டி சென்ற சினை மாட்டை, மாநகராட்சி மாடுபிடி ஊழியர்கள் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்றும்போது, இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், சாலையிலே விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் அடுத்த தெற்கு கேசவபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 45. இவரது குடும்பத்தினர், மூன்று தலைமுறைகளாக மாடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர்.

இவர், கடந்த 1ம் தேதி காலை 7:00 மணி அளவில், கிரீன்வேஸ் சாலையில், தன் இரு எருமை மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அவ்வழியே வந்த மாநகராட்சி மாடுபிடி ஊழியர்கள், அந்த மாடுகளை வலுக்கட்டாயமாக மாடு பிடிக்கும் வண்டியில் ஏற்றியுள்ளனர்.

அதில் ஒரு எருமை மாடு, எட்டு மாத சினையாக இருந்தது. அதை, 'லிப்ட்' மூலம் வண்டியில் ஏற்றும்போது அடிபட்டதில், அதன் இரு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு மாடை ஏற்றி சென்றுள்ளனர். காலுடைந்த மாட்டிற்கு, உரிய சிகிச்சை வழங்காமல், அப்படியே சாலையில் விட்டு சென்று உள்ளனர். இதுகுறித்து, உரிமையாளர் கேட்டதற்கு, 'புகாரளிக்க, எங்கே வேண்டுமானாலும் செல்' எனக்கூறி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாடு உரிமையாளர் ஹரிஹரன் கூறியதாவது:

கடந்த 1ம் தேதி காலை 7:00 மணிக்கு, மாடு பிடிக்கும் வாகனத்தில் வந்த ஆறு மாநகராட்சி ஊழியர்கள், என் மாடுகளை வண்டியில் ஏற்றி செல்வதாக கூறினர். சாலை நடைபாதையில் செல்லும் மாடுகளை ஏன் ஏற்றுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவமரியாதையாக திட்டினர்.

இரண்டு மாடுகளையும் ,'லிப்ட்' மூலம் வண்டியில் ஏற்றினர். அதில், எட்டு மாதம் சினையாக இருந்த ஒரு எருமை மாடு, அடிபட்டு விழுந்ததில் அதன் இரு கால்கள் உடைந்தன. உடனே சாலையிலே விட்டு சென்றனர். பின், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

கால்நடை ஆம்புலன்ஸ் '1962' அழைத்து, சிகிச்சை அளிக்க அணுகியபோது, 'டாக்டர்கள் இல்லை' என்கின்றனர். பல முறை விடாமல் முயற்சித்தபின், போன் வாயிலாகவே மருந்து பெயர் கூறி, அதை வாங்கி தடவுமாறு கூறுகின்றனர். பின் தனியார் மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தேன்.

மாடுபிடி ஊழியர்களின் அடாவடியால் தான், என் மாடுக்கு இப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது. சாலைகளில் மாடுகளை விடுவது தவறு தான். ஆனால், வீட்டிற்கு ஓட்டி செல்லும்போது, ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்.

சினை மாடு என தெரிந்தும், அதை துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம். இவ்வாறு மாடு பிடி ஊழியர்களால் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது.

இதுகுறித்து, அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்க சென்றேன், 'இன்ஸ்பெக்டர் கூறினால் தான் புகார் பெறுவோம்' என்கின்றனர். எனவே, இதற்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement