பாகிஸ்தானுக்கு குட்பை சொன்ன மைக்ரோசாப்ட்; 25 ஆண்டுகளாக செயல்பட்ட நிறுவனம் மூடல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த தமது கிளை அலுவலகத்தை மைக்ரோசாப்ட் மூடியுள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 2023ம் ஆண்டுக்கு பின்னர், ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. கிட்டத்தட்ட 9100 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இது ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதம் ஆகும்.
இந் நிலையில், பாகிஸ்தானில் உள்ள தமது கிளை அலுவலகத்தை மைக்ரோசாப்ட் மூடுவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய மறுசீரமைப்புக்கு மாறுவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.
அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்துள்ளார். இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தை காட்டுவதாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் மாஜி அதிபர் ஆரிப் ஆல்வி கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தை அசைக்கும் ஒருவித அறிகுறி தான் என்று தெரிவித்துள்ளார்.
எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.


