கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., பெருந்திரள் கூட்டம்

மதுரை; மதுரை எல்.ஐ.சி., கோட்ட அலுவலகத்தில் அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா பேசினர்.
இல்லத்தில் இருந்து மருத்துவம் பார்ப்பதற்கான ரொக்க மருத்துவ பயன் வழங்குதல், மருத்துவக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல், 1986ல் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகையை உயர்த்தி வழங்குதல், 1997க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு சீரான பஞ்சப்படி வழங்குதல், ஊதிய உயர்வுக்கு ஏற்றார் போல் பென்ஷன் தொகையை உயர்த்துதல்.
20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு பென்ஷன் வழங்குதல். 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்குதல். முன்னாள் ராணுவத்தினர், பொறியாளர்ளுக்கு பென்ஷன் திட்டத்தில் இணைய வாய்ப்பு வழங்குதல், அனைத்துப் பொதுத்துறை இன்சூரன்ஸ் ஓய்வூதியர்களுக்கும் 30 சதவீத குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் போன்ற தீர்மானங்களை ஓய்வூதியர் சங்கச் செயலாளர் சேகர் விளக்கினார். செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலாளர் ரமேஷ் கண்ணன், எல்.ஐ.சி., முதல்நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், இந்திய காப்பீட்டு புலத் தொழிலாளர்கள் தேசிய சம்மேளனப் பொதுச் செயலாளர் அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.