மத்திய அமைச்சர்கள் மீது மோடி கோபம்

2

புதுடில்லி: பொதுவாக, அரசு அலுவலகங்களில் பைல்களில், அதிகாரிகள், 'நோட்' எழுத, அந்த பைல் அமைச்சர் வரை செல்லும்.

ஆனால், 2008ல் மத்திய அரசு, 'இ- - ஆபீஸ்' திட்டத்தை துவக்கியது. அதாவது, பேப்பர் பைல்களுக்கு பதில், அனைத்தும் கம்யூட்டரிலேயே செய்ய வேண்டும் என்பதுதான் இந்த திட்டம். முதலில், ஒரு சில அமைச்சகங்களில் இந்த திட்டம் பரிசோதனை செய்யப்பட்டது.

மோடி பிரதமரான பின், இந்த திட்டம் வேகம் எடுத்தது. 2019ல் மத்திய அமைச்சகங்களின், 95 சதவீத பைல்கள் இந்த இ- - ஆபீஸ் திட்டத்தின் கீழ் வந்தன. 2024க்கு பின் அனைத்துமே இ - -ஆபீஸ் திட்டத்தின் வாயிலாக இயங்க ஆரம்பித்துவிட்டது; இதை கண்காணிப்பது, மத்திய அரசின் கேபினட் செகரட்ரியேட்! இதனால், ஒரு அதிகாரியோ, அமைச்சரோ ஒரு பைலை நிலுவையில் வைத்திருந்தால், உடனே கேபினட் செயலருக்கு தெரிந்துவிடும்.

ஒவ்வொரு மாதமும், பிரதமர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்; அதில், கேபினட் செயலர் உட்பட அனைத்து அமைச்சக செயலர்களும் ஆஜராவர். அரசின் முக்கிய திட்டங்கள், எந்த அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன என்பது குறித்து பிரதமர் ஆய்வு நடத்துவார். இந்த ஆலோசனையில், பைல்கள் நிலுவையில் இருப்பது பிரதமருக்கு தெரிந்துவிடும்.

ஒரு சில அமைச்சர்கள், சில பைல்களை மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரை நிலுவையில் வைத்துள்ளனராம். ஒரு மாநிலத்திற்கு நிதி வழங்குவது குறித்த பைல், ஆறு மாதங்களாக ஒரு அமைச்சரிடம் நிலுவையில் உள்ளதாம்; இன்னொரு அமைச்சரிடம், முக்கிய திட்டங்களின், 12 பைல்கள் மூன்று மாதங்களாக துாங்குகிறதாம்.

இதனால் கடுப்படைந்துள்ள மோடி, 'இரண்டு மாதங்களுக்கு மேல், அமைச்சர்கள் எந்த பைலையாவது வைத்திருந்தால், நடப்பதே வேறு' என, எச்சரிக்கை விடுத்துள்ளாராம். இதை ஒரு உத்தரவாக, கேபினட் செயலர் அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பி உள்ளாராம்.

Advertisement