'க்யூட்' தேர்வு முடிவு வெளியீடு 3 பாடங்களில் 17 பேர் சதம்


புதுடில்லி, மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்பட்ட, 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பில் சேர, 'க்யூட்' நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை தேர்வை நடத்து கிறது. இந்நிலையில், 2025-2026ம் ஆண்டுக்கான இளநிலை க்யூட் நுழைவுத்தேர்வை, 13,54,699 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இது குறித்து தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரி கூறியதாவது: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வுகள் நடத்தபட்டன. 23 துறை சார்ந்த பாடங்கள், பொது அறிவு, மொழிப்பாடங்கள் என 37 பாடங்களுக்கு, கடந்த மே 26ல் துவங்கி 19 நாட்கள் தேர்வு நடத்தப்பட்டன.
ஒவ்வொரு மாணவரும் மொழி, துறை சார்ந்த பாடங்கள், பொது அறிவு பாடங்கள் என அதிகபட்சம் ஐந்து பாடங்களில் தேர்வு எழுத முடியும். இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வில், 8.14 லட்சம் பேர் ஆங்கிலம், 5.70 லட்சம் பேர் வேதியியல், 6.59 லட்சம் பேர் பொது அறிவுப்பாடங்களை தேர்வு செய்திருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒருவர் நான்கு பாடங்களில் சதமடித்து அசத்தியுள்ளார். இது தவிர மூன்று பாடங்களில் 17 பேர், 150 மாணவர்கள் இரு பாடங்களில், 2,679 பேர் ஒரு பாடத்திலும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement