இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

ரோம்; இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அந்நாட்டின் தலைநகர் ரோமில் கேஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான வாகனங்கள் அங்கு வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.


அப்போது எதிர்பாராதவிதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அடுத்த சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறியது.அந்த இடமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.


பல அடி உயரம் கொழுந்துவிட்டு தீ எரிந்தது. இதை நகரின் பல இடங்களில் இருந்து காணமுடிந்தது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும், தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.


இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் மீட்புக்குழுவினரும் அடங்குவர். சம்பவம் குறித்து ரோம் மேயர் ராபர்ட்டோ குயல்டயரி கூறியதாவது;


கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருமுறை வெடி சத்தம் கேட்டது. உடனடியாக மீட்புப் படையினர் அங்கு சென்றனர். அருகில் இருந்து விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல கடைகளில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ரோம் நகர போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Advertisement