பயங்கரவாதிகளை ஒப்படைக்க ஆட்சேபம் இல்லை; பதவி இல்லாத பிலாவல் புட்டோவுக்கு ஞானோதயம்

4

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.


செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது, 'இந்தியாவுடன் நல்ல உறவை கடைபிடிக்கும் விதமாக, தேடப்படும் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதா' என்று கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு அவர் பதிலளித்ததாவது; பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தினால், இருதரப்பும் விவாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானதாக பயங்கரவாதம் இருக்கும். இதனை பாகிஸ்தான் ஒருபோதும் எதிர்க்காது என்று நம்புகிறேன். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவர் தலைவர் ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.


நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க இந்தியா மறுக்கிறது. இந்தியா ஒத்துழைத்தால், எந்த பயங்கரவாதியையும் ஒப்படைப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், இந்தியா இதுவரை ஒத்துழைக்கவில்லை. ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அரசின் காவலில் இருக்கிறான். மசூத் அசாரை பாகிஸ்தானால் கைது செய்ய முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.


புட்டோ பதவியில் இருக்கும் போது இவ்வாறு பேசியது இல்லை. இப்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில் ஞானோதயம் வந்தது போல இப்படி பேட்டி கொடுத்துள்ளார்.

Advertisement