608 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா; கோலியின் சாதனையை முறியடித்த கில்

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சிலும் இந்திய அணியின் கேப்டன் சதம் அடித்தார். இதன்மூலம், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.



இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிபர்மிங்காமில் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்தது. கேப்டன் கில் 269 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இதனால், 4ம் நாளான இன்று 180 ரன்களுடன் 2வது இன்னிங்சை இந்திய தொடங்கியது. இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் (28), கே.எல்.ராகுல் (55), கருண் நாயர் (26), பன்ட் (65) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர்.


மறுமுனையில் சிறப்பாக விளையாடி கேப்டன் கில் 2வது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய அவர் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம், இரு இன்னிங்சிலும் சேர்த்து 430 ரன்கள் சேர்த்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் (147,8) ரன்கள் குவித்த கில், தற்போது விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.


அதாவது, கேப்டனாக விளையாடும் முதல் டெஸ்ட் தொடரிலேயே அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். 4 இன்னிங்சிலும் சேர்த்து 585 ரன்களை குவித்துள்ளார். முன்னதாக, 2014-15ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, இந்திய கேப்டன் கோலி 449 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.


அதேபோல, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை (346*) குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், SENA நாடுகளுக்கு எதிராக 300 ரன்களை கடந்த வீரர்களான டிராவிட் (305), சச்சின் (301) ஆகியோரின் பட்டியலில் கில்லும் (300+) இணைந்துள்ளார்.


அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 3 சதங்களை அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.


2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்தபோது இந்தியா டிக்ளேர் செய்தது .

Advertisement