மனசாட்சி, பதவிப்பிரமாணம், சட்டத்துக்கு உண்மையாக இருக்கணும்: நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை

8

மும்பை: 'நீதிபதிகள், தங்கள் மனசாட்சி, ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணம் மற்றும் சட்டத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறினார்.

மும்பை கோர்ட், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. விழாவில் நீதிபதி கவாய் பேசியதாவது:

அரசியலமைப்பின் விளக்கம் நடைமுறைக்கும், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். நீதித்துறை அலுவலர்கள் சிலரது நடத்தை குறித்து எனக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் நீதிமன்றத்தின் நற்பெயரை பாதுகாக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.

எந்தவொரு சட்டத்தையும் அல்லது அரசியலமைப்பையும், தற்போதைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

நீதிபதிகள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணம், மனசாட்சி, சட்டத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு முடிவு எடுத்தவுடன் ஒருபோதும் கவலைப்படக்கூடாது. நீதிபதியாக இருப்பது, சமூகத்திற்கும், தேசத்திற்கும் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு.
நான் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய காலத்தில் அளித்த தீர்ப்புகளை மக்கள் பாராட்டும்போது பெருமையாக இருந்தது.
எந்த ஒரு சூழ்நிலையிலும், நீதித்துறையின் சுதந்திரம் ஒருபோதும் சமரசம் செய்யப்படக்கூடாது. சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் நியமனங்களை செய்யும்போது பன்முகத்தன்மை மற்றும் தகுதி பராமரிக்கப்படுவதை கொலீஜியம் உறுதி செய்கிறது.
இவ்வாறு பி.ஆர்.கவாய் பேசினார்.

Advertisement