சட்டசபையில் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சேலம்: விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்கவும், சட்டமாக்கவும், அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சட்டசபையில் பிரதிநித்துவம் கிடைக்கும் விதமாக, இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் ஓமலூர் டோல்கேட் அருகே உழவர் தின பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், விவசாயிகளின் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஏராளமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு, ஆந்திர அரசைப் போல ஊக்கத் தொகை வழங்கவும், குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ.20 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்
கோதாவரி, காவேரி குண்டாறு இணைப்பு திட்டம், நீலகீரி பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம், அத்திகடவு 2-ம் திட்டம் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவிரி உபரிநிர் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1,236 ஏரிகளுக்கு மோட்டார் பம்ப் மூலம் நிரப்பவும், ஒகேனக்கல் காவிரியில் இருந்து உபரி நீரை மோட்டார் பம்ப் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும்.
பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50ம், எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ.65ம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
கரும்புக்கு வெட்டுக்கூலியை ஆலையே ஏற்றுக் கொண்டு, கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 நிர்ணயம் செய்ய வேண்டும்
மரவள்ளி டன்னுக்கு ரூ.20,000, மஞ்சள் குவிண்டால் ரூ.20,000 கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும்
அனைத்து ஏரி, குளங்கள், ஆறுகளை தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
விவசாயிகள் பிரச்னைகளை விவாதிக்கவும், சட்டமாக்கவும், அஙகீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சட்டசபையில் பிரதிநித்துவம் கிடைக்கும் விதமாக, இடஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும்
யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை விளைநிலங்களில் புகாமல் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு நோக்கத்திற்காக (சாலை, பவர் கிரிட். விமான நிலையம்) விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகளின் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டும்
விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தட்கல் முறையை கைவிட்டு 60 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். பூந்தோட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறையை போக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பயன்படும் வேலையாட்களை விவசாயத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூட்டுறவு, தேசிய வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சிபில் அடிப்படையில் கடன் வழங்க வேண்டும் என்ற கூட்டுறவு பதிவாளரின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்
தேசிய பயிர் காப்பீடு திட்டம், தனிநபர் பயிர் பாதிப்பின் பொழுது, காப்பீடு கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.