நான்காவது சுற்றில் சின்னர், அல்காரஸ்: விம்பிள்டன் டென்னிசில் முன்னேற்றம்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு ஸ்பெயினின் அல்காரஸ், சின்னர், சபலென்கா, ஸ்வியாடெக் முன்னேறினர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்றைய 6ம் நாள் போட்டிகள் மழையால் தாமதமாக துவங்கின. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜான்-லெனார்டு ஸ்டிரப் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-3, 6-1 என ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெசை வீழ்த்தினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, பிரிட்டனின் எம்மா ரடுகானு மோதினர். அபாரமாக ஆடிய சபலென்கா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்டை தோற்கடித்தார்.

உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 1-6, 6-7 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வியடைந்தார். ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினா 2-6, 3-6 என ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவிடம் வீழ்ந்தார்.


மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-7, 3-6 என டென்மார்க்கின் கிளாரா டாசனிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என அமெரிக்காவின் டேனியல் கோலின்சை வீழ்த்தினார்.

Advertisement