கடைசி பந்தில் இந்தியா தோல்வி * இங்கிலாந்து முதல் வெற்றி

ஓவல்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி ஓவலில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டாமி பியுமன்ட், பேட்டிங் தேர்வு செய்தார்.
34 ரன், 9 விக்.,
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் சோபியா (75), டேனி வயாத் (66) அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 137/0 ரன் (15.1 ஓவர்) சேர்த்தது. இதன் பின் இங்கிலாந்து அணியின் சரிவு துவங்கியது. கடைசி 29 பந்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 34 ரன் மட்டும் எடுத்தது இங்கிலாந்து. முடிவில் 20 ஓவரில் 171/9 ரன் எடுத்தது. இந்தியாவின் அருந்ததி, தீப்தி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
ஸ்மிருதி அரைசதம்
இந்திய அணிக்கு ஸ்மிருதி, ஷபாலி (47) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 13 ஓவரில் 123/1 ரன் எடுத்து இருந்தது. வெற்றிக்கு கடைசி 42 பந்தில் 48 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் ஜெமிமா (20), ஸ்மிருதி (56) அவுட்டாகினர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. முதல் 5 பந்தில் 6 ரன் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (23) அவுட்டாக, இந்திய அணி 20 ஓவரில் 166/5 ரன் மட்டும் எடுத்து, 5 ரன்னில் தோல்வியடைந்தது.

ஸ்மிருதி '9000'
சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில் 9000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்தியர் (முதலிடம் மிதாலி ராஜ், 314ல் 10,868 ரன்) ஆனார் ஸ்மிருதி. இவர் டெஸ்ட் (7ல் 629)), ஒருநாள் (102ல் 4473), 'டி-20' (151ல் 3942) என மொத்தம் 260 போட்டியில் 9044 ரன் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் 5வது வீராங்கனை ஆனார்.

Advertisement