துணை வேந்தர் நியமன வழக்கில் கவர்னருக்கு நோட்டீஸ்

பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டத்தை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க, கவர்னர் ரவி, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அமைப்புக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைகளில் வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை, கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது.


எதிர்ப்பு






ஆனால், மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மசோதாக்களுக்கு, தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கி இருந்தது. இதையடுத்து, பல்கலை களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு இறங்கியது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான இந்த குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.



ஏற்கனவே வெங்கடாசலபதி தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் திவேதி வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள், 'இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதை, சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் இடைக்கால தடை விதித்துள்ளது; இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. 'இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, அவசர அவசரமாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, வாதங்களை முன்வைத்தனர்.

இடைக்கால தடை


அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது டிரான்ஸ்பர் மனு தான். இதன் மீது உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை கேட்பதை ஏற்க முடியாது,'' என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஜூலை இரண்டாவது வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால், இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

இதையடுத்து நீதிபதிகள், 'தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக கவர்னர், யு.ஜி.சி., உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்' என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது முடிவு செய்யலாம் என்றும் அறிவித்தனர்.- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement