ரேடியல் சாலையில் கழிவு கொட்டிய வேன்களுக்கு ரூ.20,000 அபராதம்

பல்லாவரம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், திருட்டுத்தனமாக கட்டட, குப்பை கழிவுகளை கொட்டிய இரண்டு லோடு வேன்களை, மாநகராட்சி அதிகாரிகள் மடக்கி, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையோரம், விதிமுறையை மீறி, பல்வேறு இடங்களில் இருந்து அகற்றப்படும் கட்டட கழிவுகள், குப்பை மற்றும் மரக்கழிவுகளை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டுவது அதிகரித்து விட்டது.

சாலையோரம் கழிவுகளை கொட்டும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்தும், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், நாராயணா பள்ளி அருகே, இரண்டு வேன்களில் குப்பை, கட்டட கழிவுகளை எடுத்து வந்து, கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்தது.

இதையடுத்து, 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் ஊழியர்கள் விரைந்து, அந்த வாகனங்களை மடக்கி, அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.

விசாரணையில், வாகனங்களின் எண் டி.என்., -75- எப்-5892, டி.என்., -74 -ஹெச்-5474 என்பதும், அவற்றின் உரிமையாளரான முருகேன் என்பவர், பம்மலில் வசித்து வருவதும் தெரியவந்தது.

புறநகர் பகுதிகளில் இடிக்கப்படும் கட்டட இடிபாடுகளை, இதுபோல் வாகனங்களில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டுவதே இவர்களின் வேலை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு வேன்களுக்கும், தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், அடுத்த முறை இதுபோல் செய்தால், வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Advertisement